×

வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் எதிரொலி பலத்த மழையால் பல ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது * கால்வாய், ஆறுகளில் வெள்ளம் * வீடுகள் இடிந்து விழுந்தது

வேலூர், நவ.7: வேலூர் நிவர் புயல் எதிரொலியாக விடிய விடிய காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்தன. பல ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. வேலூர் மாவட்டத்திலும் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு மேல் காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் வரை விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு போன்ற பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.

இரவு முழுவதும் பெய்த கனமழையால் வேலூல் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் நிலையம், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், தோட்டப்பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். மாங்காய் மண்டி அருகே உள்ள திடீர் நகர், இந்திரா நகர், கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து. தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், ஏராளமான வீடுகளுக்குள் 3 அடி அளவுக்கு மழை தண்ணீர் புகுந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த உடமைகளும் சேதமடைந்தன. உடனடியாக அங்கிருந்த 200 பேரும் மீட்கப்பட்டு மாநகராட்சி முஸ்லீம் உருது பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், காட்பாடி வி.ஜி.ராவ் நகர், காந்தி நகர் விரிவாக்கம், சித்தூர் பஸ் நிலையம், ஓடைப்பிள்ளையார் கோயில், சில்க் மில் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

காற்றுடன் மழையால் சில இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் அதை அகற்றினர். குறிப்பாக அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் நேமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கு சொந்தமான சிமென்ட் ஷீட் வீடு நேற்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. அதில் இருந்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உடனடியாக 5 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு அந்த கிராமத்தில் உள்ள வறுமை ஒழிப்பு கட்டிடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அகரம் அடுத்த சின்னப்பள்ளிக்குப்பம் கிராமத்தில் பலத்த காற்றினால் வேப்பமரம் மாநில நெடுஞ்சாலையில் வேருடன் சாய்ந்தது. ஒடுகத்தூர் அடுத்த கல்லுட்டை கிராமத்தில் கவிதா என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகை இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பசுமாடுகள் சிக்கியது. இதையடுத்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயத்துடன் பசுமாடுகளை மீட்டனர்.

அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிக்குப்பம் வேலு என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. அவரது குடும்பத்தினர் அனைவரும் மற்றொரு வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமதுபுரம் ரமேஷக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் ஏதுவும் இல்லை.வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியில் பயிரிடப்பட்ட 3 ஏக்கர் வாழைமரங்கள் பலத்த காற்றால் சாய்ந்துள்ளது. இதேபோல் சிங்கிரி கோயில் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சுமார் 10 ஏக்கர் வாழைமரங்கள் முறிந்தது. வேலூர் சித்தேரி மாநில நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம் வேருடன் சாய்ந்தது. இதனால் மின்வயர் அறுந்தது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணிகளில் மேற்கொண்டனர்.  குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மோட்டார் மூலம் வெளியேற்றினர். 25க்கும் மேற்பட்ட இடங்களில் நிவர் புயல் காரணமாக மரங்கள் விழுந்துள்ளது. மேலும் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளது.

நேற்று பகல் வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதேபோல் நாகநதி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிவர் புயலை எதிர்கொள்ள 10 ஆயிரம் முன்களப்பணியாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் தீவிரமாக செயல்பட்டது. உடனுக்கு உடன் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அதேபோல் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் நேற்று பகல் 1 மணி வரையில் அதிகபட்சமாக பொன்னையில் 160.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. குடியாத்தத்தில்-59.6, காட்பாடி-85.6, மேல்ஆலத்தூர்-33.4, வேலூரில்-115.9, வேலூர் சர்க்கரை ஆலை அம்முண்டி-116.4 ஆகிய இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 43 நிவராண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய தாலுகாவில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை 16 மையங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல ஏக்கர் நெற்பயிர்கள், வாழை நீரில் மூழ்கியும், சாய்ந்தும் சேதமடைந்துள்ளதால் அவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vellore district ,storm ,Nivar ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்