×

திருச்சியில் புயல், பேரிடரை சமாளிக்க தீயணைப்புத்துறையினருடன் போலீசார் 66 பேர் தயார்

திருச்சி, நவ. 25: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாலும், மேலும் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக திருச்சி மாநகரில் முன்னெச்சரிக்கையாக காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க பயிற்சி பெற்ற போலீசார், தீயணைப்புத் துறையினருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 21 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, யூடிசி உயர்நிலைப்பள்ளி, இஆர் உயர்நிலைப்பள்ளி, டிஎஸ்எம் மேல்நிலைப்பள்ளி, கார்மெல் மெட்ரிக் பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 6 பள்ளி மற்றும் கல்லூரிகளும், திருச்சி மேற்கு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சேவா சங்கம் பள்ளி, கார்மெல் பள்ளி, தேசிய கல்லூரி, வெஸ்ட்லி பள்ளி, காவேரி மெட்ரி பள்ளி, பிஷப்ஹீபர் கல்லூரி, ஆர்சி பள்ளி, பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கேஏபிவி பள்ளி, அரபிந்தோ பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 14 பள்ளி மற்றும் கல்லூரிகளும், திருச்சி ரங்கம் பகுதியில் அய்யனார் மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஆகிய இடங்கள் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் தலைமையில், மாநகரில் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த 66 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் உள்பட அனைவருக்கும் முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டு தகுந்த உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான உபகரணங்கள் திருச்சி மாநகர், ஊர் காவல்படையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரிடமும் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார். திருச்சி மாநகரில் புயல் சேதம், வெள்ள சேதம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கென தனியாக கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 0431-233192 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு ஏதேனும் பாதிப்பு குறித்து தகவல் அளிக்கலாம். 96262-73399 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.

Tags : Trichy ,fire brigade ,storm ,disaster ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்