×

திருச்சி மாநகராட்சி அனுப்பியது டெல்லியில் 26, 27ம் தேதி விவசாயிகள் போராட்டம் அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் வீட்டு சிறை வைப்பு

திருச்சி, நவ. 25: டெல்லியில் நாளை (26ம்தேதி) மற்றும் 27ல் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. இதில் 15 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 500 விவசாயிகள் நேற்று காலை டெல்லி புறப்பட தயாரான போது வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நாளை 26, 27ம் தேதிகளில் இந்திய விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப், அரியானா, குஜராத், டெல்லி உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 500 விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை 7 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸில் டெல்லி புறப்பட்டு செல்ல இருந்தனர். இதற்காக நேற்று முன்தினம் மாலை முதல் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் விவசாயிகள் குவிந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக அய்யாக்கண்ணு வீட்டிற்கு சென்ற போலீசார் உங்களை வீட்டு சிறையில் அடைப்பதாக கூறி அவரது வீட்டில் இருந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் சிறை வைத்தனர்.

இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லியில் 26, 27ல் போராட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 500 பேர் கலந்துகொள்கிறோம். இதற்காக ரயிலில் முன்பதிவு செய்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக கடந்த மக்களவை தேர்தலின்போது, சிறு, குறு விவசாயிகள் போன்று பெரிய விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். கோதாவரி, காவிரி, குண்டாறு, மேல்வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் அவரது வீட்டு முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மான நிறைவேற்றப்பட்டது. இதற்காக டெல்லி செல்லும் 150 விவசாயிகளும் பாதி தலையை மொட்டை அடித்து செல்ல முடிவு எடுத்ேதாம்.

ஆனால், போலீசார் இரவு வீட்டிற்கு வந்து உங்களை வீட்டு சிறையில் அடைக்கிறோம் என கூறினர். ஆனாலும் எங்களது போராட்டம் தொடரும். விவசாயிகளுக்கு லாபகரமான விலை தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால், கொடுக்கவில்லை. நதிகளை இணைப்போம் என்கின்றனர். ஆனால் செய்யவில்லை. தற்போது போராட்டத்திற்காக ரயிலில் முன்பதிவு செய்தும் எங்களை அனுப்ப மறுக்கின்றனர். விவசாயிகளுக்கு எப்போதும் சோதனை, நஷ்டம் தான் மிஞ்சுகிறது. ஆனாலும் டெல்லி செல்வதை தடுத்தாலும் இங்கிருந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். வீட்டு சிறையில் இருந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் பாதி மொட்டை அடித்தும், பாதி மீசையை மழித்தும் இருந்தனர்.

Tags : Trichy Corporation ,Delhi ,Ayyakkannu ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...