×

விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, நவ. 25: நிவர் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக இயற்கை பேரிடர் முன்னேற்பாடு குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து கண்ணணாறு பாலத்தின் கரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் வலிமைப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதியிடம் தென்னந்தோப்புகளில் புயலினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க மேற்கொண்டுள்ள மட்டை கழித்தல், தென்னங்குலைகள் நீக்கிய விபரம் குறித்து கேட்டறிந்தார். இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகாவிடம் பேரிடர் புகலிடத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பள்ளியின் நீர் சேமிப்பு, கழிவறை மற்றும் தங்கும் அறைகளின் விளக்குகள் பராமரிப்பு பற்றி கேட்டறிந்தார். அப்போது அனைத்துத்துறை அதிகாரிகளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவ தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர், மதுக்கூர் பால்வள தலைவர் துரைசெந்தில், சார் ஆட்சியர் பாலச்சந்தர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ