×

மழையால் நகர் பகுதியில் கழிவுநீர் தேக்கம் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு

ராமநாதபுரம், நவ.25: வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் தொடர்பாக வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில் வருகின்ற 25ம் தேதி வடதமிழகத்தில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் நகர்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதன் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாக தகவல் வந்தது. இதனை அடுத்து, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்எல்ஏ ஆகியோர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, அரண்மனை சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மழைநீரை உடனடியாக அகற்றிட நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை வெளியேற்று நிலையம் மற்றும் மாடக்கொட்டான் பகுதியில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, சார் ஆட்சியர் சுகபுத்ரா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Rainwater Sewage Stagnation Collector ,MLA Inspection in Urban Area ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...