மாநகரில் பரவும் டெங்கு காய்ச்சல்

திருப்பூர், நவ.25:திருப்பூர் மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இங்கு பல்வேறு மாநில, மாவட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருவதால் மாநகர பகுதி மிகவும் நெருக்கமாக காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று வேகமாக பரவும் அபாயமும் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், டெங்கு காய்ச்சலால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகர பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக, நேற்று மாஸ்கோநகர் பகுதியில் மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் ஆய்வுக்கு சென்றார். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் வீடு, வீடாக சென்று, அங்குள்ள தண்ணீர் தொட்டிகள், டிரம் போன்றவற்றை பார்வையிட்டு, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கொரோனா தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகளில் 200 பணியாளர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவின்பேரில் மேலும் கூடுதலாக இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுபோல், மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சமடைய தேவையில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories:

>