×

நிவர் புயலால் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்

ஊட்டி, நவ. 25:  நிவர் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் சூறாவளியுடன் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: நிவர் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் உள்ளன. புயலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அபாயகரமான பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதிகமான மழை பொழிவு இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் வழங்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காற்றின் வேகம் அதிகமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகர மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எந்ததெந்த பகுதிகளில் அதிக பாதிப்புகள் இருந்ததோ அங்கு மீண்டும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஜேசிபி., இயந்திர வாள், ஜெனரேட்டர்கள், மின் விளக்குகள் போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. புயல் வரும் பாதையில் நீலகிரி இல்லை என்ற போதிலும் அதீத மழை பொழிவு மற்றும் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 40 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

நாளை 25ம் தேதி (இன்று), 26ம் தேதிகளில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள், இந்த இரு நாட்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கனமழை, பலத்த காற்று வீசும் போது தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்க கூடியவர்கள் நிவாரண முகாம்களில் தங்கலாம். 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு உணவு, அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மின் துண்டிப்புகளை சரி செய்யும் பொருட்டு மின்வாரியம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மின்பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம். மழை பாதிப்புகளை 1077 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : storm ,Nivar ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...