×

ஊட்டி இளம் சிறார் நீதிக்குழுமத்தில் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை நடத்த வசதி

ஊட்டி, நவ.25: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு இளம்சிறார் நீதிக் குழுமம் அமைக்கப்பட்டது. ஊட்டி ஏடிசி., பகுதியில் இக்குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட இளம் சிறார் நீதிக்குழும முதன்மை நடுவராக பாரதிராஜன் உள்ளார். இதுதவிர உறுப்பினர்களாக பிச்சையம்மாள், அருள்தாஸ் ஆகியோர் உள்ளனர். 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் பல்வேறு குற்றங்கள் குறித்து இளம் சிறார் நீதிக்குழுமத்தில் விசாரிக்கப்பட்டு, சிறார் கையகப்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, வருங்காலங்களில் தீயவழிகளில் மனத்தைச் செலுத்தாமல், நல்வழியில் மனத்தைச் செலுத்த பயிற்சி தரப்படுகிறது. கூர்நோக்கு இல்லங்களில், சிறார்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

சிறார் கூர்நோக்கு இல்லங்கள் மாநில அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளம் சிறார் நீதிக் குழுமத்தின்  வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 18 வயதிற்குட்பட்ட சிறார்கள், கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனிடையே ஒவ்வொரு முறையும் வழக்குகள் விசாரணைக்கு வரும் போது சிறார்கள் அழைத்து வரப்பட்டு நேரில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் நேரில் அழைத்து வந்து ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளது.

இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறார்களிடம், வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. அனைத்து சிறார் குழுமங்களிலும் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை மேற்கொள்ளும் வசதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள குழுமத்திலும் இவ்வசதி நேற்று துவக்கப்பட்டது. முதன்மை நடுவர் பாரதிராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், நீலகிரியில் கடந்த 2013ம் ஆண்டு இளம்சிறார் நீதிக்குழுமம் துவக்கப்பட்டது. இதுவரை 90 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 45 வழக்குகள் நிலுவையில் உள்ளன, என்றார்.

Tags : Facility ,video conferencing ,Ooty Juvenile Court ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை