ஸ்டிரைக்கில் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஆப்சென்ட் போடப்படும்

ஈரோடு,  நவ. 25:   நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 26ம் தேதி அனைத்து  தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் (ஸ்டிரைக்) அறிவித்துள்ளனர்.  இதில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றால்  துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தொழிற்சங்கங்கள்  சார்பில் 26ம் தேதி நடக்கும் போராட்டத்தில், ஆசிரியர்கள் பங்கேற்க  வாய்ப்பு இல்லை. பள்ளி கல்வி துறையை பொறுத்தவரை உதவி தொடக்க கல்வி  அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், கல்வி மாவட்ட  அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அரசு பள்ளிகளில்  பணியாற்றுவோர் என அலுவலக ஊழியர்கள் யாரும் இந்த பொது வேலை நிறுத்த  போராட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள்.

இவர்கள் யாரும் பொது வேலை நிறுத்த  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள சங்கங்களில் இடம் பெறவில்லை. வழக்கம்  போல் 26ம் தேதி ஊழியர்கள் பணிக்கு வந்து செல்வர். இருப்பினும் 26ம் தேதி  விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் சொந்த வேலை, மருத்துவ விடுப்பு போன்றவை  எடுத்திருந்தால், அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்.  இதுதவிர 26ம் தேதி  முறையான தகவல் தெரிவிக்காமல், ஸ்டிரைக்கில் பங்கேற்றால் அவர்களுக்கு  ஆப்சென்ட் போடப்பட்டு, அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்  என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>