×

பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் கடல் சீற்றம்

புவனகிரி, நவ. 25: புயல் கரையை நெருங்கி வருவதால் பரங்கிப்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.வழக்கமாக கடலில் காணப்படும் அலைகளை விட பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்புகின்றன. மேலும் கடல் இரைச்சலுடனும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. புயல் அறிவிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை கரைகளில் உள்ள பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் காற்றில் படகுகள் அடித்துச் செல்லாமல் தடுக்கும் வகையில் படகுகளை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர்.கடற்கரை கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட ஓரிடத்தில் தங்கி வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று கள நிலவரங்களை கண்காணித்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்தில் தங்கி இருந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினரை சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், புவனகிரி தாசில்தார் சுமதி ஆகியோர் நேரில் சென்று அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர். பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் தேன்மொழி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இப்பகுதியில் தங்கி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Parangipettai ,Killa ,areas ,
× RELATED கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால்...