×

விழுப்புரம் அருகே தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

விழுப்புரம், நவ. 25: விழுப்புரம் அடுத்துள்ள கள்ளக்குறிச்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் குழந்தைவேல், சம்சுதீன் மகள் ஜெயிலானி, நாராயணசாமி மகன் செந்தில், குப்புசாமி மகள் அஞ்சலிதேவி ஆகிய 4 பேரும் சேர்ந்து நடத்தி வந்தனர்.  இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்தனர். பின்னர் பணம் செலுத்தியவர்களுக்கு பணம்  கொடுக்காமல் ஏமாற்றியதோடு, மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். பணம் செலுத்திய பொதுமக்கள், தாங்கள் செலுத்திய பணத்தை தரும்படி கேட்டதை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். பணம் கட்டி பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.20 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய குழந்தைவேலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய செந்தில் (30) என்பவரை விழுப்புரத்தில் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜெயிலானி, அஞ்சலிதேவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Villupuram ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...