×

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

திருவள்ளூர்: பொதட்டூர்பேட்டை கோணசமுத்திரம் முனிநாயுடு பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(69). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து நாசம் செய்துவிடுவதால் வேலி அமைத்து அதில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சியுள்ளார். இதை அறியாத சுப்பிரமணியத்திடம் பணியாற்றி வந்த விவசாய கூலியான அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவி(47) என்பவர் கடந்த 2015ம் ஆண்டு நெல் மூட்டைகளை எடுப்பதற்காக அந்த வேலியை தாண்டி சென்றபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

வீடு திரும்பாததால் அவரது மகன் சின்னதம்பி அங்கு சென்று பார்த்தபோது சஞ்சீவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த சுப்பிரமணிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags : Landlord ,prison ,
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...