நிவர் புயல் எதிரொலி ; திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 130 தீயணைப்பு வீரர்கள் விடுப்பின்றி பணியாற்ற வேண்டும்

திருவாரூர், நவ.24: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 130 தீயணைப்பு வீரர்களும் விடுப்பு இல்லாமல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் நாளை (25ந் தேதி) புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மூலம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பேரிடர் மீட்பு பணிக்கு முன் களப்பணியாளர்களான தீயணைப்பு துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறையினர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அரசு தெரிவித்துள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளில் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் இருந்து வரும் தீயணைப்பு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா தெரிவித்துள்ளார். மேலும் நேற்று திருவாரூர் தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 12 தீயணைப்பு நிலையங்கள் இருந்து வருகின்றன.

இதில் 130 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வரும் நிலையில் அனைவரும் விடுப்பு இல்லாமல் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு 101 என்ற எண்ணைத் அழைக்கலாம்.

Related Stories:

>