×

நிவர் புயலை எதிர்கொள்ள காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தயார்

காரைக்கால், நவ.24: நிவர் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரயை கடக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசியது: நிவர் புயல் காரணமாக பொது மக்களுக்கும், அரசு சொத்துகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் மேற்கொள்ளவேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில், 1070 என்ற இலவச தொலைபேசி எண் 24 மணி நேரமும் அவசர தேவைகளுக்காக செயல்படும். குடிநீர், மின் தேவைகள் தடையில்லாமல் பாரத்துகொள்ளவேண்டும். 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால், மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள 16 குழுக்கள் சூழலுக்கேற்ப பணியாற்றும். 74 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு, தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு தகவல் தரப்பட்டு அனைவரும் கரை திரும்பி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான ஏற்பாடு, மருத்துவ அவசர தேவைக்கான முன்னேற்பாடு செய்யவும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும். 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு இன்று (நவ.24) காரைக்கால் வரவுள்ளது என்றார். கூட்டத்தில், கலெக்டர் அர்ஜூன்சர்மா, போலீஸ் எஸ்.எஸ்.பி நிஹாரிக்காபட், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Karaikal ,district administration ,storm ,Nivar ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...