×

தேசிய போட்டியில் கோவா செல்ல வசதியின்றி தவிக்கும் தடகளவீரர் தமிழக அரசு உதவிடுமா?

வாடிப்பட்டி, நவ. 24: பல்வேறு திறமையிருந்தும் வசதியில்லாததால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தடகள வீரர் பரிதவித்து வருகிறார். மதுரை  வாடிப்பட்டி அருகே மட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்டது ராமராஜபுரம் கிராமம். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட இக்கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் திருப்பதி (19). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி படிப்பை வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். படிக்கும் போதே 2014ம் ஆண்டு மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 1000 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை பெற்றார். மதுரையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

மாநிலங்களுக்கு இடையே பஞ்சாப் மாநிலத்தில் நடந்த 10 ஆயிரம் மீட்டர் தொடர் மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதையடுத்து இவருக்கு, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவா மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு போதிய பொருளாதார வசதியின்றி தவித்து வருகிறார் தடகள வீரர் திருப்பதி. இதுகுறித்து திருப்பதி கூறுகையில், ‘தேசிய தடகள போட்டியில் பங்கேற்றால் நிச்சயம் வெற்றி பெற்று உலக அளவில் நடக்கும் தடகள போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இதை என் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டுள்ளேன். நான் கோவா செல்ல அரசு உதவ வேண்டும்’ என்றார்.

Tags : athlete ,government ,Tamil Nadu ,facilities ,Goa ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...