×

சம்பள குறைப்பு புதிய அரசாணை வேளாண் துறை அலுவலர்கள் அதிர்ச்சி

ஒட்டன்சத்திரம், நவ. 24: தமிழக அரசின் சம்பள குறைப்பு புதிய அரசாணையால் வேளாண் துறை அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டு, ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில், பல துறை அரசு ஊழியர்கள் பலரின் சம்பளத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அரசாணையில், வேளாண்மை துறை அலுவலர்கள் உட்பட பலருக்கு அடிப்படை சம்பளத்தை குறைத்து நிர்ணயம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.8500 முதல் ரூ.15000 வரை மாத ஊதியத்தில் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த கொரானோ காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிர பணியாற்றி வரும் நிலையில், இந்த திடீர் சம்பள குறைப்பு நடவடிக்கை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறியதாவது, ‘கடந்த ஆண்டுகளில் தேசிய அளவில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வாங்குவதற்கு துறை ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றியும், விவசாயிகளுக்கு பல மத்திய மாநில திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியும், இயற்கை இடர்பாடுகளின் போது சிறப்பாக மக்களுக்கும் பணியாற்றிய வேளாண் துறை அலுவலர்கள், ஊழியர்கள் இந்த சம்பள குறைப்பு உத்தரவினால் மிகுந்த மனஉளைச்சல், வேதனையில் உள்ளனர். திடீர் சம்பள குறைப்பால் வீட்டு வாடகை, கல்விக்கட்டணம், உணவு தேவைக்கு வரும் காலங்களில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே தமிழக அரசு வேளாண்மை துறை அலுவலர்கள், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : government agriculture department officials ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது