மண் குவாரியில் தொழிலாளர்கள் மீது தாக்குதல்

திருப்பூர், நவ.24: திருப்பூர் மாவட்டம் மன்னரை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சாமிநாதன் என்பவர் திருப்பூர் மாவட்ட ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர், ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட புத்தூர்பள்ளபாளையம் பகுதியில் இவரது நண்பர் செந்தில்குமார் மற்றும் முருகசாமி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் அரசின் அனுமதி பெற்று மண் குவாரி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் குவாரியில் மண் ஏற்றிக்கொண்டிருந்த லாரிகளை தடுத்தி நிறுத்தி அப்பகுதியை சேர்ந்த சீனிவாச மூர்த்தி மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட சிலர் லாரியை தடுத்து நிறுத்தியதுடன் லாரி டிரைவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தாக்குதலுக்கு உள்ளான டிரைவர்கள் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சாமிநாதன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மண் குவாரியில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று தங்கள் ஆதரவாளர்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முறைகேடாக மண் அள்ளுவதாக புகார் மனு அளித்தனர். அதே நேரத்தில் மண்குவாரி உரிமையாளர் சாமிநாதன் மற்றும் அவரது ஆதரவாளர் சிலருடன் கலெக்டர் அலுவகம் வந்தவர்கள் முறையான அனுமதியுடன் நடத்தி வரும் மண்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சீனிவாசன், சிவக்குமார் உள்ளிட்டோர் மீது கலெக்டரிடமும், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம்  மனு அளித்தனர். இரு தரப்பினரிடமும் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்த போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.

Related Stories:

>