×

நகராட்சி கமிஷனர் இல்லாததால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் தீவிரம்

குன்னூர், நவ.24: குன்னூரில் கமிஷனர் இல்லாததால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்கிரமித்து 4 முதல் 5 மாடி வரை கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு இறுதியில் பெய்த கன மழையால் ஆக்கிரமிப்பு காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ளநீர் புகுந்து குன்னூர் நகரமே கடும் பாதிப்புக்குள்ளாகியது.

தன்னார்வலர்கள் இணைந்து குன்னூர் ஆற்றினை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்து சிலர் கட்டிடம் கட்டி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது என விதிமுறை இருந்தும் அரசியல் பலத்தை வைத்து 4 முதல் 5 மாடி கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
முக்கிய ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால் அதிக மழைப்பொழிவு காலங்களில் மண்சரிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், மலையை குடைந்து சாலை அமைப்பதற்கு தடை உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கை பயண்படுத்தி தேயிலை தோட்டங்களில் சாலை அமைத்து புதிய கட்டிடங்களை கட்டி வருகின்றனர். குன்னூர் அருகே உள்ள ரோலியா அணைக்கு செல்லும் சாலையில் பல அடுக்கு கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதி ஜெகதளா பஞ்சாயத்து, எடப்பள்ளி, வண்டிச் சோலை மற்றும் குன்னூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வருவதால் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பணத்தை பெற்று கொண்டு 4 மாடி கொண்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

குன்னூர் நகராட்சி முன்னாள் கமிஷனர் பாலு, மாடல் ஹவுஸ் பகுதியில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தார். தற்போது அவர் மாற்றப்பட்டதால் சீல் வைத்த கட்டிடங்களில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்,`குன்னூர் நகராட்சியில் தொடர்ந்து நேர்மையாக செயல்படும்  கமிஷனர்கள் பணி மாற்றம் செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சர் வரை சென்று பணி மாறுதலுக்கு முக்கிய காரணமாக உள்ளனர்.  தற்போது, குன்னூர் நகராட்சியில் கமிஷனர் இல்லாததால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதை நகர திட்ட அலுவலர்கள் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : buildings ,Municipal Commissioner ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...