அந்தியூர் வனச்சரகத்தில் விரைவில் சூழல் சுற்றுலா

ஈரோடு,நவ.24:அந்தியூர் வனச்சரகத்தில் விரைவில் சூழல் சுற்றுலா துவங்கப்பட உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் புலி, சிறுத்தை, யானை போன்ற  ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள நிலையில்,  சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் வண்ணபூரணி என்ற பெயரில் சூழல் சுற்றுலா செயல்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த சுற்றுலா  தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூர்  வனக்கோட்டத்தில் சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.  அந்தியூரில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கி அங்கிருந்து புறப்பட்டு  வரட்டுபள்ளம் அணை, பர்கூர் இன கால்நடை ஆராய்ச்சி நிலையம், மடம், மணியாச்சி  பள்ளம், கொங்காடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடும் வகையில்  திட்டமிடப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.    

இது குறித்து  ஈரோடு வனக்கோட்ட அலுவலர் விஸ்மிஜூவிஸ்வநாதன் கூறியதாவது: அந்தியூர் வனச்சரக  பகுதிகளில் சூழல் சுற்றுலா தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள்  நடந்து வந்தது. இப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. சுற்றுலா  பயணிகள் தங்கும் வகையில் தாமரைக்கரையில் உள்ள வனத்துறை ஓய்வு விடுதி  சீரமைக்கப்பட்டு வருகிறது.  அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள வரட்டுப்பள்ளம்  அணை, மணியாச்சிபள்ளம் போன்ற மக்கள் கவரும் வகையிலான இடங்கள் அடையாளம்  காணப்பட்டு வருகின்றன. வனக்குழு மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்செல்ல  வாகன வசதி, உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். வாரத்தில் 2  நாள் என்ற அடிப்படையில் சூழல் சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஸ்பான்சர்ஸ் பெறப்பட்டு வருகிறது. கட்டணம் மற்றும் சுற்றுலா செல்லும் நாட்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில்  வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>