கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு கடலூர், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே தொடரும் பிரச்னை இருதரப்பினர் மோதல்

பாகூர், நவ. 24: கிருமாம்பாக்கத்தில் கடலூர், புதுச்சேரி பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் இருந்து புதுச்சேரி எல்லையான முள்ளோடை, கன்னியக்கோவிலுக்கு 5ம் எண் ஷேர் ஆட்டோ இயக்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரி ஆட்டோக்கள் தமிழக காவல்துறை கெடுபிடியால் கடலூர் பகுதிக்கு இயக்க முடிவில்லை. இதனால் கடலூர் ஆட்டோக்களை புதுவைக்குள் விடாமல் தடுத்ததால், கடலூர், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், கிருமாம்பாக்கம் தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ்குமார் (40) நேற்று முன்தினம் கிருமாம்பாக்கம் சார்காசிமேடு சாலையில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த சார்காசிமேட்டை சேர்ந்த பஸ் டிரைவர் ஹானஸ்ட்ராஜ் என்கிற ஆனந்தராஜ் (28) ஆட்டோ பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாயா? என மகேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹானஸ்ட்ராஜ் மகேஷ்குமாரை கல்லால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையறிந்த மகேஷ்குமாரின் சகோதரர்கள் ஜான் மற்றும் பரத் ஆகியோர் ஹானஸ்ட்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதி இடையே ஆட்டோ இயக்குவது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, போலீசார் சமரசம் செய்து வந்தனர்.

தற்போது இந்த பிரச்னை அடிதடி, கைகலப்பு என மாறியுள்ளது. நீறு பூத்த நெருப்பாக உள்ள இப்பிரச்னையில் கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு போக்குவரத்து மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>