×

நிவர் புயல் எச்சரிக்கை எதிரொலி புதுச்சேரி, கடலூர், மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி, நவ. 24:      நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, கடலூர், மரக்காணம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவானதை  அடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் 24ம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னத்திற்கு நிவர் என  பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் அவசரமாக நேற்று முன்தினம் கரை திரும்பினர். புதுச்சேரியில் கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் 1,500க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மீனவ கிராம கடற்கரையிலும் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

 புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள புதுச்சேரியில் அனைத்து முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
 இதற்கான பணிகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அகற்றி சமூக நலக்கூடங்கள், பள்ளிக்கூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க எற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பாதிக்கப்படுபவர்களை உடனே நிவாரண முகாம்களுக்கு கொண்டு வருவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  நகரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பேரிடர் மீட்புக்குழுவை வரவழைக்கவும் மாநில அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 கடலூர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளது. இதற்கிடையே மரக்காணம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கடலூர் துறைமுகத்தில் உள்ளூர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்தப் பகுதி தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம், 700 கிமீ புதுச்சேரியின் தென்கிழக்கு மற்றும் சென்னையின் தென்கிழக்கில் 740 கி.மீட்டரில் உருவாகியுள்ளது.  இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் உள்ளூர் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து நீர்நிலைகளையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

 மரக்காணம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு செய்துள்ளனர். இந்த அறிவிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவிலை. மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் அதிக உயரம் எழும்பி தரைப்பகுதியை தாக்குகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் படகு இன்ஜின்களை மேடான இடத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்றனர். எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க பொது இடம் ஏற்படுத்திக்கொடுக்க மீன் வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். நிவர் புயல் மரக்காணம் பகுதியில் தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் கடற்கரையோரம் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pondicherry ,fishermen ,Cuddalore ,sea ,Marakkanam ,
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...