×

எல்லப்பநாயக்கன்குளத்து வாய்க்கால் முட்செடிகளை அகற்றிய இளைஞர்கள்

உடன்குடி,நவ.24: திருச்செந்தூர் அருகே எல்லப்பநாயக்கன்குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை அடைத்திருந்த முட்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வத்துடன் அகற்றினர்.
 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருவதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. இதையடுத்து  வைகுண்டம் அணையில் இருந்து பயன்பெறும் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு,  மாதவன்குறிச்சி உள்ளிட்ட 34 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயன்பெறும் நிலையில் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி அடைப்புகள், முட்புதர்கள் மண்டின.

 குறிப்பாக எல்லப்பநாயக்கன்குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதிகளில் முட்கள், பனை ஓலைகள், கழிவுகள் ஆக்கிரமித்திருந்தன. இதனால் எல்லப்பநாயக்கன்குளத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்ததோடு, வாய்க்கால் பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  இதையடுத்து கீழ நாலுமூலைக்கிணறு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாய்க்காலில் அடைபட்டிருந்த முட்செடிகளை தன்னார்வத்துடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், கீழ நாலுமூலைக்கிணறு ஊர் பொருளாளர் ராஜா, கோடீஸ்வரன், முருகன், சதீஷ், மது, கதிரவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதை பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மனதார பாராட்டினர்.

Tags : Youths ,Ellapanayakkankulam ,canal ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை