×

கார்த்திகை மாத பவுர்ணமிக்கு பருவத மலை ஏற பக்தர்களுக்கு தடை செயல் அலுவலர் தகவல்

கலசபாக்கம், நவ. 24: கார்த்திகை மாத பவுர்ணமிக்கு பக்தர்கள் பருவதமலை ஏறுவதற்கும், கிரிவலம் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பாலாம்பிகை அம்பாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். 4,560 அடி உயரமுள்ள பருவத மலையின் உச்சியில் உள்ள கோயிலுக்கு சென்று, வடமாநிலங்களில் உள்ளது போல் பக்தர்கள் கொண்டு செல்லும் அபிஷேகப் பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யலாம்.
ஆகாய படி, ஏணி படி, கடப்பாரை படி, விமானப் படி இவைகளை கடந்து பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் பவுர்ணமி தினத்தன்று செல்வது வழக்கம்.

தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கும் கிரிவலம் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடர்ந்து 8வது முறையாக வரும் 29ம் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி அன்று பக்தர்கள் மலை ஏறுவதற்கும் கிரிவலம் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் மகா தீபம் ஏற்றுவதற்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags : pilgrims ,mountain ,Karthika Pavurnami ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...