(தி.மலை) ஆட்டோ கடத்திய 3 பேர் கைது காஞ்சிபுரம் ரவுடியின் கூட்டாளிகளா? வந்தவாசியில் டிரைவரை கத்தியால் குத்தி

வந்தவாசி, நவ.23: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆதம் மகன் மஸ்தான்(23), ஆட்டோ டிரைவர். கடந்த 20ம் தேதி இரவு 2 வாலிபர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுகா அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டும் என மஸ்தானிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மஸ்தான் புறப்பட்டார். மங்கநல்லூர் கூட்ரோடு அருகே சென்றபோது 2 வாலிபர்களும் திடீரென மஸ்தானை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி கீேழ தள்ளிவிட்டு ஆட்டோவுடன் தப்பியோடிவிட்டனர். புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை விளாங்காடு கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த தாமோதரன்(21), விநாயகபுரம் பகுதியை சேர்ந்த தரணிதரன்(20) என்பதும், இவர்களது நண்பர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சாதிக் என்பவர் கூறியதன்பேரில் மஸ்தானை தாக்கியதும் தெரியவந்தது.

மேலும், வந்தவாசி ஆட்டோ டிரைவர்கள் சங்க தலைவர் நசீர்கானுக்கும், மஸ்தானுக்கும் முன்விரோத தகராறு இருந்துள்ளது. இதனால் நசீர்கான், தனது நண்பரான சாதிக்கின் மூலம் இந்த சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாமோதரன், தரணிதரன் மற்றும் நசீர்கான் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இதனிடையே சாதிக், தாமோதரன், தரணிதரன் ஆகிய மூவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி தரின் கூட்டாளிகளா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கவும் முடிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>