×

வாய்க்கால் பாலத்தில் நீர்க்கசிவு; சேறும், சகதியுமாக மாறிய சாலை பொதுமக்கள் அவதி

போச்சம்பள்ளி, நவ.23:போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி பாலத்திலிருந்து நீர் கசிந்து சாலையில் செல்வதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி அணையிலிருந்து கால்வாய் மூலம் பாலேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியிலிருந்து சந்தூர் ஏரி வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், கடந்த 2012ம் ஆண்டு 13.8 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. வேலம்பட்டி பகுதியில் 300 மீட்டருக்கு இக்கால்வாயானது  பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு மண் கால்வாய் உள்ளதால் அடிக்கடி நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், பாலம் தாழ்வாக கட்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது, வேலம்பட்டி பாலத்தில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்குவதால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், ஒன்றரை கி.மீ தூரம் கடக்க வேண்டிய சாலையை பொதுமக்கள் 6 கி.மீ தூரம் சென்று சுற்றி வருகின்றனர். இதுகுறித்து எருமாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விமலாபெரியசாமி (எ) மணி கூறுகையில், ‘எம்ஜிஆர் நகர், சந்தியாப்பாகொட்டாய், எருமாம்பட்டி, வேட்ராயன் கொட்டாய், வேங்கானூர், சவூளூர் உள்ளிட்ட கிராம மக்கள் போச்சம்பள்ளி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலம்பட்டி பாலம் வழியாகதான் செல்ல வேண்டும். இந்த பாலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வழிந்தோடுவதால், பொதுமக்கள் கடும் சிரமமடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் நீர்கசிவை சரிசெய்ய வேண்டும்,’ என்றார்.

Tags : Leakage ,canal bridge ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...