ஜவாஹிருல்லாஹ் பேட்டி பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிக்கு நிரந்தர ஆசிரியர்கள் செல்லாமல் டிமிக்கி

திருச்சி, நவ.23: ஆண்டுதோறும் 6-14 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்தினுடைய குழந்தைகள் கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி ஏப்ரல்-மே, அக்டோபர், ஜனவரி என 3 முறை நடத்தப்படுகிறது. மாதங்களில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்படுகிறது. இது ஒரு தொடர் நிகழ்வாகும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் இணைந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என திட்டச் செயலாக்கம் மாற்றப்பட்ட காரணத்தால் கடந்த 2018ம் ஆண்டு முதல் 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறியும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டும் முதல் கட்டமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடியிருப்பு வாரியான சிறப்பு கணக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும். கொரோனா காரணத்தால் இப்பணிகள் தற்போது துவங்கி உள்ளது. கடந்த 21ம் தேதி துவங்கிய இக்கணக்கெடுப்பு பணி டிச.10ம் தேதி முடிகிறது. அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆசிரியப் பயிற்றுனர்கள், ஆர்எம்எஸ்ஏ பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத் தன்னர்வலர்கள், தொடர்புடைய பிறத்துறை அலுவலர்கள் போன்றோர் உதவியுடன் அனைத்து வழிகாட்டுதலையும் பின்பற்றி தங்கள் மாவட்டத்தில் பள்ளி் செல்லா குழந்தைகள் எவரும் விடுபடாமலும், எந்த ஒரு குடியிருப்பு பகுதியும் விடுபடவில்லை என உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தபட வேண்டும்.

ஆனால், இப்பணியை முழுக்க முழுக்க பகுதி நேர ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர். நிரந்தர ஆசிரியர்கள் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடாமல், பகுதி நேர ஆசிரியர்களை செல்லுமாறு நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், ‘தன்னார்வலர்கள் கூட இப்பணியில் ஈடுபடலாம். ஆனால், யாரும் இப்பணிக்கு வருவதில்லை. நிரந்தர ஆசிரியர்களும் பகுதி நேர ஆசிரியர்களே இப்பணியை செய்ய வேண்டும் என்கின்றனர். கொரானாவுக்கு பயந்து கொண்டும், இப்பணிக்கு வந்தால் எந்த பணப்பலனும் இல்லை என்பதாலும் நிரந்தர ஆசிரியர்கள் வரமறுக்கின்றனர்.

நிரந்தர ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல எங்களுக்கு காப்பீடு கூட கிடையாது. இந்த கொரோனா காலத்தில் நாங்கள் சொந்த ரிஸ்க்கில் பணியாற்றி வருகிறோம். நிரந்தர ஆசிரியர்களின் பின்னணியில் ஆசிரியர் சங்கங்கள் இருப்பதால், நமக்கு பின்னாட்களில் பிரச்னை வரக்கூடாது எனக்கருதி அதிகாரிகளும், இப்பணிக்கு செல்லுமாறு நிரந்தர ஆசிரியர்களுக்கு உத்தரவிட தயங்குகின்றனர். பொதுவாக ஒரு கூட்டம் நடத்தி ‘இப்படியொரு கணக்கெடுப்பு பணி இருக்கிறது. அனைவரும் ஈடபட வேண்டும்’ என பெயரளவில் ஆசிரியர்களுக்கு அறிவுரை மட்டுமே அதிகாரிகள் வழங்கிவிட்டு செல்கின்றனர். நாங்கள்தான் நாள் முழுவதும் அல்லல்பட வேண்டி உள்ளது.

கொரோனா காலத்தில் வகுப்புகள் இல்லாததால் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கும் நிரந்தர ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து நிரந்தர ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ‘ஏதாவது ஒன்றிரண்டு ஆசிரியர்கள் அப்படியிருப்பார்கள் என்பதற்காக அனைவரையும் தவறாக எடை போடக்கூடாது. இக்கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் ஏராளமாக உள்ளனர். இது போன்ற பணிகளில் ஈடுபடும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தேவையான பணப்பலன்களை அரசு வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>