×

ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் ஸ்மார்ட் கார்டு வழங்காமல் இழுத்தடிப்பு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் புகார்

மதுரை, நவ. 23: மதுரையில் மத்தி, தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இந்த அலுவலகங்களில் புதிய லைசென்ஸ் பெறுதல், புதுப்பித்தல், வாகனங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தினசரி பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது லைசென்ஸ், ஆர்சி புத்தகம் ஆகியவை ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படுகிறது. காலையில் விண்ணப்பித்தால் லைசென்ஸ், ஆர்சி புக் ஆகியவை ஸ்மார்ட் கார்டாக மதியம் வழங்கப்படும். ஆனால், தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தால் 10 நாட்களுக்கு மேலாகியும் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு உடனடியாக லைசென்ஸ், ஆர்சி புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், ஸ்மார்ட் கார்டு பெறுவதற்காக கூடுதலாக பணம் கேட்பதாக ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் புகார் அளித்துள்ளன.

இது குறித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், ‘லைசென்ஸ், ஆர்சி புக்குகளை ஸ்மார்ட் கார்டாக தயாரித்து கொடுக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் செய்து வருகிறது. விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து கார்டு செலவு தொகையாக ரூ.200ஐ ஆர்டிஓ அலுவலகங்கள் பெற்றுக்கொள்கின்றன. ஒவ்வொரு ஓட்டுனர் பள்ளியும் ஸ்மார்ட் கார்டிற்காக குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என ஆர்டிஓ அலுவலகங்கள் நிர்ப்பந்தம் செய்கின்றன. விண்ணப்பதாரர்களிடம் கார்டுக்கான பணத்தை பெற்றுவிட்டு கூடுதலாக எங்களிடம் லஞ்சம் கேட்பது நியாயமில்லை’ என்றனர். 

Tags : Owners ,tug-of-war training school ,offices ,RTO ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு