×

பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட மாடுகள் இறந்தது தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு

ஊட்டி, நவ. 23: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மசினகுடி, தொரப்பள்ளி, நிலாக்கோட்டை போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சுமார் 600 மாடுகள் வரை வழங்கப்பட்டுள்ளது. கறவை மாடுகளுக்கு குறைந்த வயது இருந்தால் மட்டுமே அவைகள் முறையாக பால் கறக்கும். ஆனால் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான மாடுகள் வயதானவைகளாக உள்ளதாக கூறப்பட்டது.

அடிமாடு என்ற அழைக்கப்படும் மிகவும் வயதான பசுமாடுகளே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட 30க்கும் மாடுகள் மேற்பட்டவை இறந்து விட்டதாக தெரிகிறது. இதனால் கறவை மாடு வழங்கியதில் முறைகேடுகள் நடப்பதாகவும், முறையாக ஆய்வு மேற்கொண்டு முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள் வாங்கி தரப்பட்டன. இவற்றில் பல இறந்துவிட்டதாக புகார்கள் வந்தன.

கால்நடைத்துறை இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்த மாடுகளுக்கு காப்பீடு பெறப்பட்டு வேறு மாடுகள் வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன. மாடுகளின் இறப்பிற்கு காரணம் நீண்ட தூர பயணம் மற்றும் சோர்வு காரணமாக அவை இறந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பந்தலூர் பகுதிகளுக்கு கேரளாவில் இருந்து மாடுகள் வரவழைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Tags : Committee ,death ,
× RELATED தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை...