×

ஆவுடையார்கோவில் அருகே ஊரின் பெயரை தவறாக எழுதிய நெடுஞ்சாலைத்துறை

அறந்தாங்கி, நவ.22: ஆவுடையார்கோவில் அருகே ஊரின் பெயர் பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் தவறாக குறிப்பிட்டுள்ள குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் ஓரங்களில், ஒவ்வொரு ஊரின் எல்லை தொடங்கும் பகுதியில் அந்த ஊரின் பெயரை தாங்கிய பெயர்பலகை, ஒவ்வொரு ஊரின் தொலைவு மற்றும் அந்த ஊரின் பெயரை தாங்கிய பலகை என பலகைகள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆவுடையார்கோவில் அருகே பட்டமுடையான் செல்லும் சாலையில், முதுவளர்குடி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரின் எல்லையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊரின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பலகையில் முதுவளர்குடி என்பதற்கு பதிலாக ஊரின் பெயரை முதுவனர்குடி என தவறுதலாக குறிப்பிட்டு பலகை வைத்துள்ளனர். இவ்வாறு ஊரின் பெயரை தவறுதலாக நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ளதால், முதுவளர்குடிக்கு புதிதாக வருபவர்கள், பெயர் பலகையை பார்த்து குழப்பமடையும் நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: சாலையில் செல்பவர்கள் அவர்கள் செல்ல வேண்டிய ஊரை அடையாளம் காட்டுவதற்காக சாலையின் ஓரங்களில் வழிகாட்டு பலகை வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் பலகையில் ஊரின் பெயரை சரியாக எழுத வேண்டிய பொறுப்பும், கடமையும் நெடுஞ்சாலைத்துறைக்கு உள்ளது.

ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் தங்களுக்கு உள்ள பொறுப்பையும், கடமையையும் மறந்து, பலகை வைப்பதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. தற்போது முதுவளர்குடி என்பதற்கு பதிலாக முதுவனர்குடி என ஊரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஊரின் பெயரை தவறுதலாக எழுதுவதால், அந்த ஊரின் அர்த்தமே மாறிவிடுகிறது. மேலும் சாலையில் செல்வோரும் குழம்பும் நிலை உள்ளது என்று கூறினார். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக முதுவளர்குடியில் தவறுதலாக வைத்துள்ள பெயரை சரியாக எழுத வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Highways Department ,Audyarko ,town ,
× RELATED அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு