அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை தேக்கமடையும் வழக்குகள்

அருப்புக்கோட்டை, நவ. 22: அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால் வழக்குகள் தேக்கமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய போலீசாரை நியமிக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு உள்ளது. இந்த பிரிவில் இன்ஸ்பெக்டர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு பிரிவில் இருந்து எஸ்.ஐக்கள், போலீசார்  மாற்றுப்பணியாக மட்டும் குற்றப்பிரிவுக்கு வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு பிரிவில் கூடுதலான பணிகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், மாற்றுப்பணியில் இருக்கும் போலீசார் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு செல்கின்றனர். இதனால், குற்றப்பிரிவின் பணிகளான நகரில் ரோந்து, கூட்டமான பகுதிகளில் கண்காணிப்பு, சந்தேகம் படும்படியான நபர்களை பிடித்து விசாரணை, திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கண்டுபிடித்தல் ஆகிய பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எந்தப் பணியும் முழுமையாக நடப்பதில்லை. இதனால், குற்றவழக்குகள் தேக்கமடைந்துள்ளது. தனிநபராக இருக்கும் இன்ஸ்பெக்டரும் செயல்பட முடியவில்லை.

தற்போது நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடிப்பது. ஒடும் பேருந்துகளில் பிக்பாக்கெட் அடிப்பது, வங்கிகளில் பணத்தை எடுத்து வருபவர்களிடம் வழிப்பறி செய்வது உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் குற்றப்பிரிவிற்கு போதிய போலீசாரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் இரவு நேர ரோந்துபணி முறையாக நடக்கும். இதேபோல மாவட்டத்தில் உள்ள மற்ற காவல்நிலையங்களிலும் உள்ளது. எனவே, குற்றப்பிரிவிற்கு தனியாக போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>