×

தேனி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை

தேனி, நவ. 22: தேனி மாவ ட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் முல்லை பெரியாறு பாசன பகுதி, பிடிஆர், கால்வாய் பாசன பகுதி, சோத்துப்பாறை பாசன பகுதி, மஞ்சளாறு அணை பாசன பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நெல் வயல்களில் தண்ணீர் தேங்கினால் துத்தநாகம், தழைச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது.

எனவே வயல்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ யூரியா, ஒரு கிலோ துத்தநாக சல்பேட் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய ஏக்கருக்கு 50 கிலோ அம்மோனியம் சல்பேட், 22 கிலோ யூரியா, 15 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து இட வேண்டும். 15 நாளுக்கு மேற்பட்ட இளம் நாற்றுக்களை இடைவெளி அதிகம் உள்ள இடங்களில் நடவு செய்து நிரப்ப வேண்டும்.

30 நாள் வரை ஆன பயிர்களில் அதிக துார் உள்ள நாற்றுக்களை பிரித்து நடவு செய்ய வேண்டும். சூடோமோனஸ் புளூசரன்ஸ் இடுவதன் மூலம் நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இந்த பணிகளை விவசாயிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நெற்பயிர்களை நோய் தாக்காமல் பாதுகாத்து அதிக விளைச்சல் எடுக்கலாம்.

Tags : Theni district ,Associate Director of Agriculture ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...