×

கேட்கும் அளவு உரங்களை வழங்க வேண்டும்

மானாமதுரை, நவ.22:  மானாமதுரை பகுதியில் யூரியா தட்டுப்பாடு காரணமாக நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு விவசாய சங்கங்கள் மூலம் விவசாயிகள் கேட்கும் அளவிற்கு உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டை போலவே பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை வைகை பாசனப்பகுதி கிராமங்களான கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், வாகுடி, முத்தனேந்தல், இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, கிருங்காகோட்டை, ராஜகம்பீரம், கால்பிரவு, பீசர்பட்டினம், கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர் பகுதிகளில் மட்டும் ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விதைப்பு முறையில் மாங்குளம், சித்தலக்குண்டு, சீகன்குளம், விளாக்குளம், பெருங்கரை, முத்துராமலிங்கபுரம், புளியங்குளம் உள்ளிட்ட பகுதியில் இருபது நாட்களுக்கு முன்னரே நெல் பயிரிடப்பட்டுள்ளது. நடவு, விதைப்பு முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு 15ம் நாள், 30ம் நாள், 45 நாள்களில் உரமிடுவது அவசியம் என்பதால் விவசாயிகள் அரசு கூட்டுறவு விவசாய சங்கம் மூலமும் தனியார் கடைகளிலும் உரங்களை பெறுவது வழக்கம்.
ஆனால் ஒரு விவசாயிக்கு இரண்டு மூட்டைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் குத்தைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும், விவசாய அட்டை, மண் பரிசோதனை அட்டை இல்லாதவர்களுக்கும் உரங்கள் கிடைப்பதில் சிரமமாக இருப்பதால் யூரியா உரம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி கண்ணன் கூறுகையில், எங்களது நிலத்திற்கு அருகில் உள்ள நிலங்களில் உரிமையாளர்கள் திருப்பூர்,கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் வசிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். நிலத்தின் உரிமையாளர் நேரில் வந்து கைரேகை வைத்தால் தான் உரங்கள் வழங்கப்படும் என்ற விதிமுறையால் அவர்களது நிலங்களுக்கு உரிய உரங்களை பெற முடியவில்லை. தனியார் கடைகளிலும் உரங்கள் கிடைக்க வில்லை. எனவே விவசாயிகள் கேட்டும் அளவிற்கு உரங்களை வழங்கவேண்டும்’’ என்றார். வேளாண்மைத்துறை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, விவசாய நிலங்களின் தன்மை குறித்து ஆராய்ந்து வழங்கப்பட்ட மண் பரிசோதனை அட்டை, உழவர் அடையாள அட்டை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் ஒரு விவசாயிக்கு எவ்வளவு நிலம் உள்ளது.

என்று ஆய்வு செய்து அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிலரது வயல்களில் உரிமையாளர்கள் இறந்து போனாலும் வெளியூர்களில் இருந்தாலும் உரங்களை கைரேகை வைத்து பெறமுடியாது. கூடுதல் உரங்கள் தேவைப்படுவோர் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய விதிமுறைகளின்படி சிறப்பு அனுமதி பெற்று உரங்களை வாங்கி செல்கின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...