8 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பிய ஊட்டி

ஊட்டி, நவ. 22: 8 மாதங்களுக்கு பின் ஊட்டி சகஜ நிலைக்கு திரும்பியது. வழக்கம்போல் பூங்காக்கள் மற்றும் கடை வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டதுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டது. துவக்கத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது. இதனால், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துச் சென்றனர். தற்போது இ பாஸில் தளர்வு அளிக்கப்பட்டு, இ என்ட்ரி மட்டும் செய்தால் போதுமானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அதன்பின் கூட்டம் குறையாமல் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.

வார விடுமுறை நாளான நேற்றும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது. அதேபோல், கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அனைத்து சாலைகளிலும் வாகனங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூங்கா சாலையில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. 8 மாதங்களுக்கு பின் ஊட்டி நகரம் சகஜநிலைக்கு திம்பியுள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>