×

மாவட்ட நுழைவு வாயிலில் வசூலிக்கப்படும் வரி பணத்தை பசுமையை பாதுகாக்க பயன்படுத்தப்படும்

ஊட்டி, நவ. 22: நீலகிரி மாவட்ட நுழைவு வாயிலில் வசூலிக்கப்படும் பசுமை வரி, வனத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையில் பசுமையை பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்திற்குள் கல்லாறு மற்றும் கக்கநல்லா சோதனைச் சாவடிகளில் நுழையும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30 பசுமை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ெபாதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களுக்கு பசுமை வரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு சக்கர வாகனம், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பசுமையை பாதுகாக்க முடியும். குறிப்பாக, வனத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையில் பசுமையை பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அதேபோல் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காகவும் உள்ளாட்சித்துறைக்கு நிதி பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித் தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி பசுமையான மாவட்டமாக மாற்றிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

Tags : district entrance ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...