வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்கு அரசியல் கட்சியினர் உதவ வேண்டும்

நாக்கல், நவ.22:  நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தமிழ்நாடு செய்திதாள்கள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா தலைமையில் நேற்று, நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சிவசண்முகராஜா பேசியதாவது: அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சேர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யம் பணியை திறம்பட செய்ய வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 18 வயது நிரம்பிய ஒருவர் கூட விடுபடாமல் சேர்க்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரும், தங்களது வாக்குசாவடி முகவர்கள் குறித்த விவரங்களை, விரைவாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்கு உதவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகளுக்காக அதிகபட்சம் 30 படிவங்களை வழங்க, தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை, பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் ஆர்டிஓக்கள் கோட்டைக்குமார், மணிராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>