×

ரோடு போட்ட 10 நாளில் ஜல்லி பெயர்ந்த அவலம்

தர்மபுரி, நவ.22: தர்மபுரி அருகே, புதியதாக போடப்பட்ட சாலை 10 நாட்களில் ஜல்லி பெயர்ந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஜல்லிகற்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உங்கரானஅள்ளி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் வழியாக செல்லும் சாலையை  வெங்கட்டம்பட்டி உள்ளிட்ட 18 கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏமகுட்டியூர்-உங்காரனஅள்ளி வரை, ஒன்றரை கி.மீ தூரத்திற்கு ₹38.37 லட்சம் மதிப்பில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், பழைய சாலையை பெயர்த்தெடுக்காமல், அதன் மீதே தார் கலந்த ஜல்லிக்கற்களை கொட்டி சாலை அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, தரமின்றி சாலை அமைக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று புதிய சாலையில் இருந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மண் வெளியே தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் இருந்து பெயர்ந்த ஜல்லிக்கற்களை கைகளில் எடுத்துக் கொண்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால், கிராம மக்கள் சிறிது நேரத்தில் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘உங்கரானஅள்ளிக்கு 10 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலையில், ஜல்லிகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். நடந்து சென்றாலே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகிறது. மழை பெய்தால் சாலை முற்றிலும் சேதமடைந்து, பழைய நிலைக்கே வந்துவிடும். எனவே, தரமற்ற சாலையை அகற்றி விட்டு, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’
என்றனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...