ஊராட்சி தலைவர் மீது பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்பூர், நவ.21: ஊராட்சி தலைவர் மீது பொய்யான சாதி வன்கொடுமை புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுண்டக்காம்பாளையம் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த சுண்டக்காம்பாளையம் பகுதியில் குமார் (36) என்பவர் கடந்த 6 வருடங்களாக வசித்து வருகிறார். எங்கள் பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக குமார் அப்பகுதியில் குடியிருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார்.

மோசமான செய்கைகள் மூலம் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆனந்தன் என்ற லோகநாதனிடம் கூறினோம். மேலும், அவரது தலைமையில் பொதுமக்கள் குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தோம்.

போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், குமார் தனது தவறை மறைக்க, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் மற்றும் அவரது நண்பர் ஜெயகோபால் ஆகியோர் மீது குமார் பொய்யான சாதிய வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories:

>