×

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நீலகிரி அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி

ஊட்டி,  நவ. 21: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத  ஒதுக்கீட்டின் கீழ் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவ  படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.   மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட்  நுழைவு தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழகத்தில் அரசு  பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவ படிப்பில்  சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ  படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் அரசு பள்ளிகளில் படிக்கும்  மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி  மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம்  நிறைவேற்றியது. இதன் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் 313 இடங்களும்,  பி.டி.எஸ். படிப்பில் 92 இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் அரசு பள்ளிகளில்  படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

   இந்நிலையில் 2020-21ம்  கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு நேற்று முன்தினம்  துவங்கியது. இந்த கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்  ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 1  மாணவர் உட்பட 4 பேர் மருத்துவப்படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.  அம்பலமூலா அரசு மேல்நிலை பள்ளி மாணவர் நித்தின், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாரா, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மகிதா மற்றும் ஊட்டி அரசு  மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பழங்குடியின மாணவி பிரியா ஆகியோர்  மருத்துவப்படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் கலந்தாய்வில்  பங்கேற்பதற்காக சென்னை சென்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Tags : School ,Nilgiri ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி