மருதமலையில் பக்தர்களின்றி நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

கோவை, நவ. 21: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். விழா துவக்க நாளில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கி, சூரசம்ஹாரம்  நிகழ்ச்சியை கண்ட பிறகு திருக்கல்யாணத்துடன் விரதத்தை முடிப்பார்கள். அதன்படி, நடப்பாண்டில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ம் தேதி துவங்கியது.  இதையடுத்து, பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை துவங்கினர். இதில், முக்கிய நிகழ்வான சூரனை வதம்  செய்யும் நிகழ்ச்சி மருதமலை கோயிலில் நேற்று நடந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு மட்டும் பக்தர்கள் பங்கேற்க கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு வெள்ளை குதிரை வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர், ஒரு மணியளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், மாலை 3 மணியளவில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடந்து முடிந்தது. இன்று நடைபெற உள்ள திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>