×

வேலை நாட்கள் குறைப்பதை கண்டித்து எண்ணெய் நிறுவன அதிகாரியை தொழிலாளர்கள் முற்றுகை 3 மணி நேரம் போராட்டத்தால் பரபரப்பு

நாகை, நவ.21: நாகை அருகே பனங்குடி சிபிசிஎல் ஆலை விரிவாக்கத்தை காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு 30 நாள் வேலையை 15 நாட்களாக குறைத்த அதிகாரிகளை 3 மணி நேரம் முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலையின் உள்ளே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை அருகே பனங்குடியில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பனங்குடி, உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் , நரிமணம், திட்டச்சேரி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சிபிசிஎல் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் முடிவு எடுத்து நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆலை விரிவாக்கத்தை காரணம் காட்டி சிபிசிஎல் நிர்வாக அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த 30 நாள் வேலை நாட்களை 15 நாட்களாக குறைத்தது.

இதனை கண்டித்து நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் 80க்கும் மேற்பட்டோர் சிபிசிஎல் அதிகாரிகளை அதன் ஆலையின் அலுவலகத்தில் வைத்து முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைப் போராட்டம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ஆலையின் அலுவலகத்தின் உள்ளே சி பி சி எல் தொழில்நுட்ப இயக்குனர் சங்கர், முதன்மை பொது மேலாளர் சங்கர், பொது மேலாளர் (ஊழியர் நலன்) தமிழ்முதல்வன், நாகை ஆர்டிஓ பழனிகுமார், தாசில்தார் ரமாதேவி உள்ளிட்ட அதிகாரிகளை வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதையடுத்து அரசு மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடந்ததால் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் தீர்வு காணும் படி ஆர்டிஓ பழனிகுமார் கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : oil company ,strike ,
× RELATED தனியார் மற்றும் கூட்டுறவு...