×

தோகைமலை கோயிலில் கொரோனா ஊரடங்கால் சூரசம்ஹார உற்சவம் ரத்து: பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தோகைமலை, நவ. 21: கரூர் மாவட்டம் தோகைமலையில் மலைமீது மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் சுப்ரமணியசாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி மண்டபம் முன் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி 10 நாட்களுக்கு மண்டப படிகள் நடத்தி பல்வேறு வாகனங்களில் சாமிகள் ஊர்வலம் வருவது வழக்கம். இதையொட்டி இப்பகுதி பக்தர்கள் விரதம் இருந்து சுப்ரமணியசாமியை வழிபட்டு வருவார்கள்.முதல் நாள் மண்டக படியின்போது காமதேனு வாகனத்திலும், 2ம் நாள் அன்ன வாகனத்திலும், 3ம் நாள் மயில் வாகனத்திலும், 4ம் நாள் அன்ன வாகனத்திலும், 5ம் நாள் மயில் வாகனத்திலும் சுப்ரமணியசாமி வீதியுலா வருவார்.

6ம் நாள் சூரசம்ஹார விழாவின்போது சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியசாமி குதிரை வாகனத்தில் கந்தசஷ்டி விழா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதிகளுக்கு கொண்டு வருவார்கள். முக்கிய வீதிகளில் சிங்கம், புலி, யானை வேடத்தில் மாறிமாறி வலம் வரும் சூரபத்மனை சுப்ரமணியசுவாமி வேலால் வதம்செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது போர்களத்தில் மோதிக் கொள்வது போல் சுப்ரமணியசுவாமியையும், சூரபத்மனையும் பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு அங்குமிங்கும் தூக்கிச்செல்வது வழக்கம்.
ஒவ்வொரு வீதியிலும் சூரபத்மனின் தலையை சுப்ரமணியசுவாமி துண்டிக்கும் போது அரோகரா, அரோகரா என்று பக்தர்கள் கோஷங்களை முழங்கி வழிபடுவார்கள்.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் அன்று இரவு மயில் வாகனத்தில் சுப்ரமணியசாமியுடன் வள்ளி தெய்வானை புறப்பாடு நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்ரமணியசாமியை வழிபடுவார்கள்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரசால் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நேற்று தோகைமலை மலைமீது உள்ள கோயிலில் சுப்ரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Tags : festival ,Corona Uratangal Surasamara ,devotees ,Tokaimalai temple ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...