×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

* அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு * பக்தர்களுக்கு அனுமதியில்லை


திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க காலை அதிகாலை 5.50 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

தீபத்திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த், மின்ஆளுமை நிறுவன குறைதீர்வு பிரிவு சிறப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி, முன்னாள் அமைச்சர்கள் கு.பிச்சாண்டி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோயில் இணை ஆணையர் ஞானசேகர், ஏஎஸ்பி கிரண்சுருதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. கோயில் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், திருப்பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, வரும் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.மேலும், விழா நடைபெறும் 10 நாட்களும், தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாடவீதியில் சுவாமி திருவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, வெள்ளி தேரோட்டம், மகா ரதம் பவனி ஆகியவை நடைபெறாது.

Tags : Thiruvannamalai Annamalaiyar Temple Karthika Fire Festival ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்...