×

சிறுவன் கடத்தப்பட்டது உண்மையா?: தாழம்பூர் போலீசார் விசாரணை

திருப்போரூர்: சென்னைப் புறநகர் பகுதியான சேலையூரை அடுத்துள்ள அகரன் தென் கிராமம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மோகன் (36). இவரது மனைவி ரேவதி (30). இவர்களுக்கு கிஷோர் என்ற 13 வயது மகன் உள்ளான். மோகன் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி ரேவதி கோயம்பேட்டில் மொத்தமாக பூக்களை வாங்கி அவற்றை கட்டி சில்லறையாக பூ விற்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். இவ்வாறு கடைகளுக்கு சப்ளை செய்யும் பூக்களுக்கான பணத்தை அவரது மகன் கிஷோர் சென்று வாங்கி வருவது வழக்கம். அதுபோல் கடந்த புதன்கிழமை 18ம் தேதி 4 மணியளவில் வேங்கடமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் பணம் வசூல் செய்யச் சென்ற கிஷோர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மறுநாள் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில்  செல்போன் ஒன்றில் இருந்து ரேவதிக்கு பேசிய ஒருவர் கிஷோர் திண்டிவனம் அருகே தனியாக சாலையில் நின்று கொண்டிருப்பதாக கூறினார்.  இதையடுத்து செல்போன் மூலம் கிஷோரிடம் பேசிய ரேவதி பயப்படாமல் அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு திண்டிவனம் அருகே வட நெற்குணம் கிராமத்தில் வசிக்கும் தனது மாமனாருக்கு தகவல் கொடுத்து கிஷோரை அவர் மூலமாக மீட்டனர்.

பின்னர் ரேவதியின் மாமனார் கிஷோரை அழைத்துக் கொண்டு நேற்று காலை அகரம் தென் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார். கிஷோரிடம் பெற்றோர் பேசியதில் வேங்கடமங்கலம் பகுதிகளில் இருந்த பூ விற்கும் கடைகளில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்த போது மர்ம கும்பல் தன்னை வேனில் கடத்திச் சென்றதாகவும், அந்த வாகனத்தில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருந்ததாகவும், தான் உள்பட 20 சிறுவர்கள் தப்பியதாகவும் கூறினான்.  இதையடுத்து ரேவதி இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் சிறுவன் தெரிவித்த தகவல்கள் உண்மையா என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
 நேற்று மாலை பெற்றோருடன் சிறுவனை காவல் நிலையம் அழைத்து வருமாறும், கடத்தப் பட்டதாக கூறப்படும் இடத்தை காட்டுமாறும் கூறி உள்ளனர். இந்த விசாரணை முடிந்த பிறகே சிறுவன் கடத்தப்பட்டது உண்மையா என்பது தெரிய வரும்.    

Tags : police investigation ,Thalampur ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை