×

கமுதி பகுதிகளில் நாய்கள் கடித்து குதறுவதால் இறந்து வரும் புள்ளிமான்கள்

கமுதி, நவ.20:  கமுதி பகுதிகளில் நாய்கள் கடித்து குதறுவதால் ஏராளமான புள்ளி மான்கள் இறந்து வருகிறது. கமுதி அருகே கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. அடர்ந்த கருவேல மரக்காடுகளில் இவை உள்ளன. தற்போது சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கண்மாய் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் மழை நீர் பெருகி நிரம்பி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் காணப்படும் புள்ளிமான்கள் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன.இவ்வாறு வரும் புள்ளி மான்களை நாய்கள் துரத்தி கடித்து குதறி வருகிறது. நேற்று கோவிலாங்குளம் கிராமத்தில் நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பெண் புள்ளிமான் ஒன்று, வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே தஞ்சம் புகுந்தது. நாய்களை துரத்தி விட்டு விட்டு, புள்ளிமானின், காயமடைந்த பகுதிகளை ரத்தம் சிந்தாமல் துணியால் கட்டி விட்டு, பொதுமக்கள் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர்கள் வராததால், ரத்தம் வெளியேறி புள்ளிமான் சோர்வடைந்தது. சாயல்குடி வனத்துறையினர் புள்ளிமானை கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று வனத்துறையினர் கூறினர். இதேபோல் நேற்று முன்தினம் பறையங்குளம் கிராம பகுதியில் நாய்களால் துரத்தி குதறப்பட்ட புள்ளிமான் சிகிச்சை பலனில்லாமல் இறந்து. வனத்துறை அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டது.

Tags : areas ,Kamuti ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்