×

கோவை அரசு மருத்துவக்கல்லூரிகளில் 15 மாணவர்கள் சேர்ந்தனர்

கோவை, நவ. 20: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவிகள் 15 பேர் நேற்று சேர்ந்தனர். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து, உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கான கவுன்சலிங் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 313 எம்.பி.பி.எஸ் இடங்கள், 92 பி.டி.எஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவுன்சலிங்கில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 100 இடங்கள் உள்ளது. இதில், இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற கோவையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 10 பேர் நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இவர்களில் 8 மாணவிகள், 2 மாணவர்கள் ஆவர். இதேபோல் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் கோவையை சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் சேர்ந்தனர். இதன் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 15 பேர் சேர்ந்துள்ளனர்.


Tags : Coimbatore Government Medical Colleges ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்