×

விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் தரமில்லாதது: பயணிகள் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர்  மாவட்டத்தில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு  திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பொதட்டூர்பேட்டை ஆகிய  பகுதிகளில் டெப்போக்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் இருந்து 190 தொலைதூர  பஸ்கள், 88 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பஸ்சை பராமரிக்க  ஒரு ஆண்டுக்கு, ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம்  வரை சராசரியாக  செலவிடப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு பஸ்கள் தொழில்நுட்ப  ரீதியாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை  உறுதிப்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து,  உறுதிச் சான்று (எப்.சி.) வழங்குகிறார். இந்த நடைமுறைகள்  பின்பற்றப்பட்டாலும், பஸ்கள் பழைய இரும்புகளால் செய்யப்பட்டதைப் போன்று  தரமற்றும், பாதுகாப்பின்றியும், பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய  வசதியின்றியும் உள்ளன.

பல பஸ்களில் மழைக்காலத்தில் மேற்கூரை ஒழுகுவதால், பஸ்சுக்கு குடைபிடிக்க வேண்டியுள்ளது. அமரும் இருக்கைகள் நிலையற்று ஆடுகின்றன. வசதிக்குறைவுகள்  ஒரு பக்கம் இருக்க, சில பஸ்களில் கூர்மையான இரும்புக்கம்பிகள், தகடுகள்  வெளியில் நீட்டிக் கொண்டுள்ளன. திடீர் பிரேக் போடும் போதும், விபத்து  ஏற்படும் போதும், அவைகள் பயணிகளை பதம் பார்த்து, உயிருக்கே உலை வைக்கும்  அபாயம் உள்ளது. அது தவிர மழைக்காலங்களில் கண்ணாடியை துடைக்கும்  “வைப்பர்” வேலை செய்யாத பஸ்களும் உள்ளன. இதுபோன்ற நிலை  விபத்துகளுக்கு வழிவகுத்து, பயணிகள் மற்றும் ரோட்டில் செல்லும்  பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.பஸ் பழுதடைந்து  நின்றால், அதை பராமரித்த தொழில்நுட்ப பணியாளர் மற்றும் இயக்கிய டிரைவர்  மீது போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது.  

தரமான  உதிரி பாகங்களை வாங்குவது, தொழில்நுட்ப பணிகள் தரமாக மேற்கொள்வது உள்ளிட்ட  அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ள சில கிளை மேலாளர்கள், உதிரி  பாகங்கள் வாங்குவது, பராமரிப்பு பணிகளை ஒப்பந்தம் விடுவது என அனைத்திலும்  முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...