×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை..

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக தினமும் வீதி உலா மற்றும் சூர பொம்மை ஊர்வலம் ஆகியவற்றுக்கு தடை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 5 மணியளவில் கோயில் வளாகத்தின் உள்ளேயே பாரம்பரிய வழக்கப்படி நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடந்த காலங்களை போல, கோயிலுக்குள் பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்து 108 முறை வலம் வருவதற்கு, இந்தாண்டு அனுமதிக்க முடியாது. காலை 5 மணிமுதல் 7 மணிவரை 2 மணிநேரம் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். மாலை 4 மணிமுதல் 7 மணிவரை சூரசம்ஹார விழா நடைபெற இருப்பதால், திருப்பாதம் தாங்கிகள், சிவாச்சாரியார்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை என முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக சூரசம்ஹார நிகழ்வை யூடியூப் சேனலில் ஒளிபரப்புவது என முடிவு செய்யப்பட்டது.

Tags : Devotees ,Thiruporur Kandaswamy Temple Tonight ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...