×

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு: அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

திருக்கழுக்குன்றம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் கடந்த 2 நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான ஏரி, குளம் மற்றும் பாலாற்றில் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. இதையொட்டி, வாயலூர் பாலாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேசுமுகிபேட்டை உள்பட பல்வேறு  பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்க ஏற்பாடு ெசய்யப்பட்டது. ஆனால், சில இடங்களில் மட்டும் கால்வாய் அமைத்தனர். இதனால், கால்வாய் இல்லாத பகுதியில், மழை காலங்களில் மழைநீர் சாலையிலே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில், கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் கடும்  துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள், மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரில் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மழைநீர் கால்வாய் இல்லாததால், கடும் சிரமம் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம், பொதுமக்கள் சார்பில் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பலரும் காய்ச்சல் உள்பட பல நோய்களால், பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரில் பாம்பு, பூரான், தேள் உள்பட பல விஷ பூச்சிகள் ஊர்ந்து சென்று, வீடுகளில் தஞ்சமடைகின்றன. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் மரண பயத்துடன் உள்ளனர். எனவே, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதிக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து, கால்வாய் அடைப்புகளை சரி செய்து, மழைநீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய் வசதி இல்லாத இடங்களில், புதிதாக கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மழை தொடங்குவதற்கு முன்னரே பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் செல்ல தடைபடும் இடங்களை ஆய்வு செய்து சீர் செய்தால், மழைநீர் முறையாக செல்லும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டுக் கொண்டோம். ஆனாலும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதற்கு, அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Tags : Thirukkalukkunram ,protest ,
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...