சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதியில் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு

சேதுபாவாசத்திரம், நவ. 20: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை மரங்களை காண்டாமிருக வண்டு தாக்கி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

2 ஆண்டுகள் கடந்தும் கஜா புயலின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தென்னை விவசாயிகளின் வாழ்க்கையில் சோகமே சூழ்ந்துள்ளது. கஜா புயலின் தாக்கத்தால் மூன்றில் இரண்டு பங்கு தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் தப்பித்ததாக நினைத்த மரங்கள் இப்போதும் குருத்து முறிந்தும், வேர் அறுபட்டு மரங்கள் தூரோடு விழுந்து கொண்டும் இருக்கின்றன.

அரசு வழங்கிய தென்னங்கன்றுகள் பெரும்பாலானவை சரியான தரத்தில் இல்லாததாலும், தலைமுறையை கடந்து பயன் தரும் பயிர் தென்னை என்பதாலும் நிறைய விவசாயிகள் தனியார் பண்ணைகளில் விலை உயர்ந்த தென்னங்கன்றுகளை வாங்கி நடவு செய்து 2 வருடம் கடந்த நிலையில் சரி பாதிக்கும் மேலான கன்றுகள் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்புக்கூன் வண்டுகளின் தாக்குதலாலும், குருத்தழுகல் நோயாலும் பாதிக்கப்பட்டு நாசமாகி விட்டன. தென்னை விவசாயிகள் வருமானம் மிகவும் குறைந்து சொல்லெனா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.கஜாவுக்கு பிறகு தமிழக அரசு, அரசின் நிதி நிலைக்கு தகுந்தவாறு நிறைய உதவிகள் செய்தபோதும் இழப்பு அதிகம் என்பதால் அது எந்த வகையிலும் கஜா இழப்புக்கு ஈடாகவில்லை. எனவே தமிழக முதல்வர், தென்னை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்னங்கன்றுகளுக்கு ஒருங்கிணைந்த முறையிலோ, தனியாகவோ பூச்சி,நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும், பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் வாளிகளையும், மருந்தையும் இலவசமாக விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி பரப்புக்கு தக்கவாறு போதுமான அளவு வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதும், வரும் ஆண்டுகளிலும் இழப்பு ஏற்படும் தென்னங்கன்றுகளுக்கும், மரங்களுக்கும் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் தென்னை வாரியம், கஜா புயலுக்கு பிறகு முற்றிலும் பாராமுகமாகவே இருந்து வருகிறது. எனவே தமிழக முதல்வர், இதை பிரத்யேகமாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன் அவர்கள் மூலம் விரைந்து பயன் கிடைக்க தென்னை வாரிய கிளை அலுவலகத்தை தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சியில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க விவசாயத்தை நன்கு அறிந்த ஒருவரை விவசாயத்துறை அமைச்சராக விரைந்து நியமிக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>