×

களக்காடு அருகே கால்வாய்க்குள் இறங்கி சடலத்தை சுமந்து செல்லும் கிராம மக்கள்

களக்காடு, நவ. 20: களக்காடு அருகே திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்ட இறையடிக்கால், கட்டளை புதுத்தெரு. மேலக்கட்டளை கிராமங்களில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த மூன்று கிராமங்களிலும் உயிரிழப்பவர்களின் சடலங்களை இறையடிக்கால்வாய் கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். அங்கு செல்ல பாலம் இல்லாததால் கிராம மக்கள் மழைக் காலங்களில் கால்வாயில் அதிகளவில் வரும் தண்ணீருக்குள் இறங்கி சடலங்களை ஆபத்தான முறையில் சுமந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று கட்டளை புதுத்தெருவைச் சேர்ந்த நாலாயுதம் (75) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது சடலத்தையும் மார்பளவு தண்ணீரில் இறங்கியே சுமந்து சென்றனர். கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை பாலம் அமைக்கப்படாததால் கிராம மக்களின் அவலநிலை நீடிக்கிறது. இடுகாட்டுக்கு செல்ல தண்ணீருக்குள் போராட்டம் நடத்தும் நிலை தொடர்வது வேதனை தருவதாக உள்ளது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இறையடிக்கால்வாயில் பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே கிராம மக்களின் விருப்பமாக உள்ளது.

Tags : canal ,Kalakkadu ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்